

சேலம்: ஆத்தூரை அடுத்த முட்டல் கிராமத்தை ஒட்டி, வனத்துறை கட்டுப்பாட்டில் ஆனைவாரி முட்டல் சுற்றுலாத் தலம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆனைவாரி முட்டல் அருவியில் குளித்து மகிழ சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதேபோல, இங்குள்ள முட்டல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழவும், ஏரியை ஒட்டியுள்ள பூங்காவில் குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்கவும் வசதி உள்ளதால், ஆனைவாரி முட்டல் சுற்றுலாத் தலத்துக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, ஆனைவாரி முட்டலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்த நிலையில் வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக ஆனைவாரி முட்டல் அருவியில் சில தினங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று பகல் முழுவதும் மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. இதனால், ஆனைவாரி முட்டல் அருவியிலும் வெள்ளம் குறைந்து, நீர்வரத்து சீரானது. இதையடுத்து, அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது: வனப்பகுதியில் மழை இல்லாததால், அருவியில் வெள்ளம் குறைந்துவிட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். வனப்பகுதியில் மழை பெய்யாமல் இருந்தால், அருவியில் குளிப்பதற்கு நாளையும் (இன்று) சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். தீபாவளி விடுமுறைக்கு, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். எனவே, உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றனர்.