

நாமக்கல்: கொல்லிமலையில் ‘நம் அருவி’ அருகே உள்ள சுகாதார வளாகம் சிதிலமடைந்தும், உடை மாற்றும் அறையில் மின் விளக்கு போன்ற அடிப்படை வசதியும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக் குள்ளாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் மலையில் உள்ள ஆகாயகங்கை, நம் அருவி மற்றும் மாசிலா அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட அருவிகளுக்கு செல்ல வனத்துறை மறறும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் மூலம் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் அங்கு போதிய அடிப்படை வசதி செய்யப்படாமல் உள்ளதாகவும், அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் கலாச்சார ஆய்வாளர் ஆர்.பிரணவக் குமார் கூறியதாவது: கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக நம் அருவியில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆரியூர் நாடு ஊராட்சி மூலம் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனினும், அங்கு கட்டப்பட்ட சுகாதார வளாகம், உடைமாற்றும் அறை போன்ற வற்றில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. சுகாதார வளாகம் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. உடை மாற்றும் அறையில் மின் விளக்கு வசதி போன்ற எதுவும் இல்லை. இதனால் அங்கு செல்வோருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
கட்டணம் வசூல் செய்வது அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு தான். ஆனால், அடிப்படை வசதி கூட செய்யப்படாமல் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ‘நம் அருவி’ அருகே உள்ள சுகாதார வளாகம் மற்றும் உடை மாற்றும் அறையில் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஆகாய கங்கை, மாசிலா அருவி பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.