சில்லென்ற பருவநிலை... கண்ணுக்கு விருந்தாக தேயிலைத் தோட்டங்கள்... - ‘பைக்கர்ஸ்’களை கவர்ந்த மேகமலை!

மேகமலைக்கு வந்த தென்காசி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ‘பைக்கர்ஸ்’
மேகமலைக்கு வந்த தென்காசி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ‘பைக்கர்ஸ்’
Updated on
2 min read

சின்னமனூர்: குளிர்ச்சியான சூழல், பசுமையான தேயிலை தோட்டங்கள் ‘பைக்கர்ஸ்களை’ வெகுவாக கவர்ந்துள்ளதால், மேகமலைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே 25 கி.மீ. தொலைவில் மேகமலை அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில், 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு காட்டுப்பன்றி, யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன.

பரந்து விரிந்து கிடக்கும் பசுமையும், வெண்மேகங்களுமாக காட்சி தரும் மேகமலை
பரந்து விரிந்து கிடக்கும் பசுமையும், வெண்மேகங்களுமாக காட்சி தரும் மேகமலை

இதனால், மாலை 6 மணிக்கு மேல் இந்த வனச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் பெரும்பாலும் சொந்த வாகனங்களிலேயே இங்கு வருகின்றனர்.

தற்போது இதமான பருவநிலை நிலவி வருவதால் பலரும் மேகமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, ‘பைக்கர்ஸ்’ எனப்படும் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிகளவில் வருகின்றனர். கொடைக்கானல், மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த இவர்களின் கவனம் தற்போது மேகமலை பக்கம் திரும்பி உள்ளது. இதனால் தினமும் ஏராளமான ‘பைக்கர்ஸ்’ இங்கு வந்து இதமான சூழ்நிலையை அனுபவித்தும், இயற்கையை ரசித்தும் செல்கின்றனர்.\

பாண்டி
பாண்டி

இதுகுறித்து தென்காசியை சேர்ந்த பாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நண்பர்களுடன் சேர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோம்.

பெங்களூரூ, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்த நாங்கள், தற்போது மேகமலைக்கு வந்துள்ளோம். மலையும், தேயிலை தோட்டமும் ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன. நெரிசல் இல்லாத சாலைகள் எங்களுக்கு பிடித்துள்ளது. இரவு போக்குவரத்து இல்லாததால், உடனடியாக திரும்ப வேண்டியிருக்கிறது என்றார்.

அதிக திறன்கொண்ட பைக்குகளில் வரும் இளைஞர்கள் அனைவரும் ஒரு நாள் சுற்றுலாவாக இங்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் அவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in