

உதகை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உதகை அருகே பேரார் பகுதியிலுள்ள தனியார் கட்டிட கலை கல்லூரியில் 160 ஓவியர்களை கொண்டு 160 மீட்டர் ஓவியம் 120 நிமிடங்களில் வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 160 ஓவியர்கள் பங்கேற்றனர். நாட்டிலுள்ள சுற்றுலா தலங்கள், இயற்கை, போர், வன விலங்குகள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குறிக்கும் வகையில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டன. இதனை தனியார் கல்லூரி தாளாளர் முரளிகுமரன் தொடங்கிவைத்தார். இந்த சாதனையை இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ், ஐரோப்பிய யூனியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் மற்றும் அமெரிக்கன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் சார்பில் பதிவு செய்யப்பட்டன.
இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் சதாம் ஹூசேன் தலைமையில், அவரது குழுவினர் இந்த சாதனையை பதிவு செய்தனர். பின்னர், சாதனை படைத்ததற்காக தனியார் கல்லூரி தாளாளர் முரளிகுமரனிடம் சான்று வழங்கினர். இந்த சாதனையில் ஈடுபட்ட ஓவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறந்த ஓவியர்கள், தனியார் கல்லூரி முதல்வர் சரவணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக முரளிகுமரன் கூறும்போது, "கலை மட்டுமின்றி கலைஞர்களும் மறைந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஒரு மனிதனை உயிர்ப்பித்து வைப்பது கலை. சுற்றுலா, பண்பாட்டை பிரதிபலிப்பது நீலகிரி மாவட்டம் என்பதால், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 160 கலைஞர்களை உதகை அழைத்து வந்து, இந்த சாதனையை நிகழ்த்தினோம். இது பல கலைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்" என்றார்.