வண்டியூர் கண்மாயில் ரூ.50 கோடியில் படகுசவாரி சுற்றுலா தலம்: மேயர் இந்திராணி தகவல்

சாலை அமைக்கும் பணியையொட்டி தூர்வாரப்பட்டுள்ள வண்டியூர் கண்மாய் உபரி நீர் செல்லும் கால்வாய். படம்: நா.தங்கரத்தினம்
சாலை அமைக்கும் பணியையொட்டி தூர்வாரப்பட்டுள்ள வண்டியூர் கண்மாய் உபரி நீர் செல்லும் கால்வாய். படம்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

மதுரை: வண்டியூர் கண்மாயில் ரூ.50 கோடி யில் அனைத்து வசதிகளுடன் படகு சவாரி அமைக்கப்படுகிறது, என்று மேயர் இந்திராணி தெரிவித்தார்.

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன. நேற்று சுந்தர ராஜபுரம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி 3 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேயர் பேசுகையில், ‘‘ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வண்டியூர் கண் மாயில் படகு சவாரி அமைக்கப்படுகிறது. கண்மாயின் மேற்குப் புறம் மற்றும் வடக்குப் புறத்தில் மிதி வண்டிப் பாதை, நடைப் பயிற்சி பாதை அமைத்தல், யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

மேலும், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஆம்பி தியேட்டர், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுப் பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. என்றார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச் செல்வி, சரவண புவனேஸ்வரி, கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் அரசு, நகரப் பொறியாளர் ரூபன் சுரேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in