

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாதம் (ஆகஸ்ட்)5-ம் தேதி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம்அமைத்து, அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை அப்படியே வைத்து, அதனை பொது மக்கள் நேரடியாக பார்வையிடும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக ‘ஆன் சைட் மியூசியம்' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சைட் மியூசியத்தை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப் படுகின்றனர். சைட் மியூசியம் திறக்கப்பட்ட நாளில் இருந்து ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொல்லியல்மற்றும் வரலாற்று ஆய்வு மாணவர்கள் அதிகளவில் வந்து பார்வையிடுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும் ஆய்வு மாணவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து சைட் மியூசியத்தை பார்வையிட்டு செல்கின்றனர். தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்வதால் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. திருநெல்வேலி ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தை நேற்று பார்வையிட வந்தனர்.
சைட் மியூசியம் மற்றும் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வியப்புடன் பார்வையிட்டனர். மாணவ, மாணவிகளுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அகழாய்வு பணிகள் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட தினமும் ஏராளமானோர் வருவதால் குடிநீர், சுகாதாரம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.