

ராமேசுவரம்: ராமேசுவரம் தீவில் சுற்றுலா இடங்களை காண சிறப்பு சுற்றுலா பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உலகில் சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்.27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக 1970-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1980-லிருந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ராமேசுவரம் தீவுக்கு சுற்றுலாத் துறையில் தனி இடம் உண்டு. மேலும் கடற்கரை சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா என பல்வேறு வகைகளில் ராமேசுவரம் தீவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக ராமேசுவரம் என்றாலே ஆன்மிக தலம் என்ற நிலை மாறி தற்போது ஆன்மிகம் கலந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது.
இங்குள்ள ராமநாத சுவாமி கோயில், ராமர் பாதம், கோதண்டராமர் கோயில், அக்னி தீர்த்தக் கடற்கரை, ராமர், லெட்சுமண, வில்லூண்டி தீர்த்தங்கள், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, நீர் பறவைகள் சரணாலயம், வங்காள விரிகுடாவும், மன்னார் வளைகுடாவும் ஒன்றாகச் சங்கமிக்கும் அரிச்சல்முனை பகுதி, பாம்பன் பாலம், விவேகானந்தர் நினைவிடம், அப்துல் கலாம் தேசிய நினைவகம், ஆபில்-ஹாபில் தர்ஹா உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண் பதற்காக ஆண்டுதோறும் 4 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்காக ராமேசுவரம் பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்தும் சிறப்பு சுற்றுலா பேருந்து வசதிகள் இல்லை. இதனால் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்குச் செல்ல தனியார் வாகனங்கள், ஆட்டோ ஓட்டுநர்களையே நம்பி இருக்கும் நிலை உள்ளது. மேலும் தனியார் வாகனங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கின்ற அதிக கட்டணத்தை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்கள், சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக சிறப்பு சுற்றுலாப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறிய தாவது: ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா மற்றும் பக்தர்கள் பாம்பனிலிருந்து தனுஷ் கோடி அரிச்சல்முனை வரையிலுமான முழு ராமேசுவரம் தீவை சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். ராமேசுவரத்துக்கு கார், வேன்களில் சுற்றுலா வந்தால் அனைத்து இடங்களையும் ஒரே நாளில் பார்த்து விடலாம். ஆனால் அரசுப் பேருந்து, ரயில் மூலம் வருவோர் அனைத்து இடங்களையும் ஒரே நாளில் பார்ப்பது இயலாதது.
இதற்காக சுற்றுலாத் துறையின் மூலம் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து ஒரே கட்டணத்தில் அனைத்து ஆன்மிக, சுற்றுலா இடங்களையும் பார்வையிடும் வகையில் மினி சுற்றுலா பேருந்து அல்லது சிறப்பு சுற்றுலா பேருந்துகளை இயக்குவதற்கான திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராமேசுவரத்தில் சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு ஒவ் வொரு 30 நிமிடங்களுக்கும் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்கிருந்தும் எங்கும் செல்லும் வகையில், எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற அடிப்படையில் இந்த சிறப்பு சுற்றுலா பேருந்து பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பக்தர் ஒருவர் ஓர் ஆன்மிக தலத்தில் தரிசனம் முடித்து அடுத்தடுத்த ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையிலும், ஓரிடத்தில் சுற்றுலா முடிந்து, அடுத்தடுத்த இடங் களுக்குச் செல்ல முடியும். சுற்றுலாப் பயணிகள் சிறப்பு சுற்றுலா பேருந்துகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அடுத்து ஏறிய இடத்துக்கே வந்து விடலாம். திரும்பி வரும் போது கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஒரே டிக்கெட்டை பயன் படுத்திக் கொள்ள முடியும். திட்ட வரைவுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும் ராமேசுவரம் தீவு முழுவதையும் இணைக்கும் வகையில் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக் கப்படும், என்றனர்.