Published : 06 Sep 2023 06:10 PM
Last Updated : 06 Sep 2023 06:10 PM

ஆன்மிகவாதிகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாம்பன் குந்துகால் விவேகானந்தர் நினைவிடம்

பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவிடம்

ராமேசுவரம்: ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் வெகுவாக ஈர்த்து வருகிறது. புனித சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று தனக்கு வந்த அழைப்பிதழை, சுவாமி விவேகானந்தரிடம் கொடுத்து கலந்துகொள்ள வலியு றுத்தியதுடன், பயணத்துக்கு தேவையான முழு உதவியும் செய்து வழியனுப்பி வைத்தார் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி. வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த தன்னை, உலகறிந்த ஞானியாக மாற்றியவர் பாஸ்கர சேதுபதியே என நெகிழ்ச்சியுடன் தனது வாழ்நாளில் பலமுறை சுட்டிக்காட்டி மகிழ்ந்துள்ளார் சுவாமி விவேகானந்தர்.

உலக சர்வசமய மாநாட்டில், இந்து சமயத்தின் புகழை தன் சொற்பொழி வால் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நிலைநிறுத்திவிட்டு, அமெரிக்காவிலிருந்து இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார் சுவாமி விவே கானந்தர்.

குந்துகால் கடற்கரையிலிருந்து குருசடை தீவுக்கு சென்று வரும் படகு

நிலம் கொடுத்த மண்டபம் மரைக்காயர்: இந்த சம்பவம் நடந்து நூறாண்டுகள் கழித்து, விவேகானந்தர் வந்திறங்கிய பாம்பன் குந்துகால் பகுதியில் அவருக்கு நினைவிடம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அந்த இடமானது மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது. ராமகிருஷ்ண தபோவனத்திலிருந்து நிலத்தை விலைக்கு கேட்டு மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினரை அணுகினர்.

ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பல தலைமுறைகளாக நெருக்கமாக இருந்து வந்த மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர், பாஸ்கர சேதுபதியின் வழியை பின்பற்றி விவேகானந்தருக்கு நினைவிடம் கட்ட இலவசமாகவே 5 ஏக்கர் நிலத்தை அளித்தனர்.

பின்னர், 2009-ம் ஆண்டு விவேகானந்தர் நினைவிடம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில், ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூரும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நினைவிடத்தில் உள்ள
விவேகானந்தர் சிலை

சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் ஆர்வம்: ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களில் குறைந்த அளவே விவேகானந்தர் நினைவிடத்துக்கு ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். விவேகானந்தர் நினைவிடத்தில் உள்ள கண்காட்சி கூடத்தில், விவேகானந்தர் பாம்பன் கடற்கரையில் வந்திறங்கியபோது, அவரை சேதுபதி மன்னர் வரவேற்ற காட்சி, அங்கிருந்து ராமேசுவரத்துக்கு ரதத்தில் விவேகானந்தரை அழைத்துச் சென்ற காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஓவியங்களாக தத்ரூ பமாகத் தீட்டப்பட்டுள்ளன. இங்கு விவேகானந்தர் வாசகசாலையும் அமைந்துள்ளது.

ராமநாதபுரம் மன்னர்
பாஸ்கர சேதுபதி சிலை

படகு சவாரி: விவேகானந்தர் நினைவிடத்தின் மாடியில் தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அருகில் உள்ள குருசடை தீவு, கோரி தீவுகளையும் பார்க்க முடியும். மேலும், விவேகானந்தர் நினைவிடம் அருகே கடல்சார் அருங்காட்சியகமும் உள்ளது.

விவேகானந்தர் நினைவிடத்திலிருந்து வனத்துறை சார்பாக குருசடை தீவுக்கு படகு சவாரியும், நினைவிட வளாகத்தில் சுற்றுலாத் துறையின் சார்பாக ஒளி-ஒலி காட்சிக் கூடமும் நடத்தப்படுகிறது.

பாம்பனிலிருந்து 5 கி.மீ. தொலைவில் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தை பார்த்துவிட்டு, அங்கிருந்து குருசடை தீவுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

விவேகானந்தர் நினைவிடம் செல்ல ராமேசுவரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. தினமும் காலை, மாலை இரண்டு முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

எனவே, ராமேசுவரத் திலிருந்தும், பாம்பனி லிருந்தும் விவேகானந்தர் நினைவிடத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கினால், அதி களவில் பயணிகளும், பக்தர்களும் வந்து செல்வர். இதனால், பலருக்கும் தெரியாமல் உள்ள இந்த இடம் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக பிரபல மடையும், என இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x