Published : 21 Aug 2023 02:19 PM
Last Updated : 21 Aug 2023 02:19 PM

முதல்வர்கள் தங்கிய மாளிகைக்கு முத்து நகரில் மூடுவிழா?

படங்கள் என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது அரசு சுற்றுலா மாளிகை. பொதுப்பணித்துறை சார்பில் இந்த சுற்றுலா மாளிகை கட்ட 01.08.1960 அன்று அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுலா மாளிகையை 12.12.1961-ல் காமராஜர் திறந்து வைத்தார்.

கடற்கரையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் என, பலரும் தங்கியுள்ளனர். விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிதாக கூடுதல் சுற்றுலா மாளிகை கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நாளடைவில் இந்த சுற்றுலா மாளிகையின் பயன்பாடு படிப்படியாக குறைந்தது. சுற்றுலா மாளிகைக்கு அருகே மீன்களை உலர்த்துவதால் ஏற்படும் வாசனை காரணமாக, இங்கு தங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டினர். தூத்துக்குடி வரும் முக்கிய பிரமுகர்கள் தனியார் விருந்தினர் மாளிகைகள், துறைமுக விருந்தினர் மாளிகையில் தங்கினர்.

இந்நிலையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே கூடுதல் சுற்றுலா மாளிகை கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த புதிய சுற்றுலா மாளிகை பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையின் பயன்பாடு முற்றிலும் நின்றுபோனது.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் முகாம் அலுவலகம் கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மே மாதம் வரை நான்கு ஆண்டுகள் அங்கு செயல்பட்டது. ஒரு நபர் ஆணையத்தின் காலம் முடிந்த பிறகு சுற்றுலா மாளிகை பழையபடி பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் கட்டிடம் பாழடைந்து வருகிறது.

இந்த வளாகத்தில் உள்ள கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டிடம் ஏற்கெனவே உடைந்து சேதமடைந்து, சுற்றிலும் முட்செடிகள் சூழந்து காட்சியளிக்கிறது. பழைய பிரதான சுற்றுலா மாளிகையும் ஆங்காங்கே சேதமடைய தொடங்கியுள்ளது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட வலுவான கல் கட்டிடமாக இருப்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் உள்ளது. அங்கிருந்த பூங்கா பகுதி சுவடே தெரியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது.

தூத்துக்குடி நகரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சுற்றுலா மாளிகையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுற்றுலா மாளிகையை சீரமைக்க அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x