Last Updated : 17 Aug, 2023 02:20 PM

 

Published : 17 Aug 2023 02:20 PM
Last Updated : 17 Aug 2023 02:20 PM

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயிலில் பராமரிப்பின்றி ‘பாழான’ சிறுவர் பூங்கா

தடுப்புச் சுவர் இல்லாத நிலையில், பூங்காவில் ஆபத்தான முறையில் நின்று நகரின் அழகை ரசிக்கும் இளைஞர்கள்.

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்டரர் மலைக் கோயில் அருகே உள்ள சிறுவர் பூங்காவை மேம்படுத்தி, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது 1,500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் வசதியாக மாநகராட்சி சார்பில் கோயில் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிலிருந்து ஓசூர் நகரப் பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்க வசதியாகக் கண்காணிப்பு கோபுரமும், பைனாகுலரும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி பூங்கா பாழ்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வெடுக்க இருக்கை வசதிகள் இல்லை. சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. மலை மீது இருந்த தடுப்புச் சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ள பைனாகுலர் அறை.

பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தருணங்களில் லேசாக கால் தவறினாலும் பள்ளத்தில் விழும் நிலையுள்ளது. மேலும், பூங்காவுக்கு குழந்தைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையுள்ளது.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயில் அருகே உள்ள பூங்காவில் சிறுவர்கள்
விளையாட முடியாதபடி சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள்.

இதுதொடர்பாக ஓசூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஓசூர் முதல் அத்திப்பள்ளி வரை உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க சந்திர சூடேஸ்வரர் கோயில் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம்.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா பாழ்பட்டுள்ளது. எனவே, பூங்காவைச் சீரமைத்து, முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பூங்காவில் கூடுதலாக பொழுதுபோக்கு வசதிகளுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x