நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மலை ரயில் சேவை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பு

நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மலை ரயில் சேவை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பு
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளயைம் - உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையே தலா ஒரு முறை, உதகை - குன்னூர் இடையே, தலா நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. கோடை சீசன் காலத்தில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் - உதகை, உதகை - குன்னூர் மற்றும் உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கியது.

இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், ஜூலை மாதம் இறுதி வரை சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில்கள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைககளில் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இதில், மேட்டுப்பாளைம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும்.

குன்னூர் முதல் உதகை வரையில் மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். சனிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகைக்கு வந்தடையும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில்கள் பயணிக்க முன் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in