

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், சுற்றுலா பயணிகள் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடப்பதாலும் உதகையில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பர் பவானி, அவலாஞ்சி உட்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மஞ்சூர், உதகை, கூடலூர், பந்தலூர், அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்புக் குழு, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த சில தினங்களாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அப்படி வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல், விடுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சுற்றுலா பயணிகள் இன்றி உதகை படகு இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. இதே போல, தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச் சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் மழையின் தீவிரம் குறைந்திருந்தது.
மழை அளவு (மி.மீ.): நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலாவில் 97 மில்லி மீட்டர் மழை பதிவானது. பந்தலூர் - 92, அவலாஞ்சி - 89, சேரங்கோடு - 61, கூடலூர் - 58, அப்பர் பவானி - 46, ஓவேலி - 38, பாடந்தொரை - 33, செருமுள்ளி - 28, எமரால்டு - 24, நடுவட்டம் - 19, உதகை - 10.3 மில்லி மீட்டர் மழை பதிவானது.