வசதிகள், பராமரிப்பு மோசம் - குற்றாலம் என்ன குற்றம் செய்தது?

பேரருவி பூங்காவில் மனிதர்களுக்கு பதில் மாடுகள்.
பேரருவி பூங்காவில் மனிதர்களுக்கு பதில் மாடுகள்.
Updated on
2 min read

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றாலத்துக்கு ஆண்டுதோறும் சாரல் சீஸன் காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் குற்றாலம் வழியாக சென்று வருகின்றனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடுதல் வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கூடுதலாக நவீன பார்க்கிங் வசதி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதிதாக எந்த ஒரு வசதியும் செய்துதரப்படாத நிலையில், ஏற்கெனவே இருக்கும் வசதிகளைக் கூட பராமரிக்காமல் வைத்திருக்கின்றனர்.

இதில் சறுக்கினால் அவ்வளவு தான்...
இதில் சறுக்கினால் அவ்வளவு தான்...

நீச்சல் குளம், வண்ண மீன்கள் காட்சியகம் போன்றவை முற்றிலும் பயன்பாடின்றி கிடக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதான அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அதன் அருகில் உள்ள பெண்கள் உடைமாற்றும் கட்டிடம் சேதமடைந்தது. அது இன்னும் சீரமைக்கப்படவில்லை. குற்றாலம் பேரருவி பூங்கா, விஸ்வநாதராவ் பூங்கா ஆகியவையும் பாழடைந்து, பொலிவிழந்து காணப்படுகின்றன.

குற்றாலம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள விஸ்வநாதராவ் பூங்காவில் செயற்கை நீரூற்று, தடாகத்தின் உள்ளே தமிழன்னை சிலை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சான்றோர் சிலைகள், சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்குமரம், ஊஞ்சல், ஏராளமான கண்கவர் சிற்பங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை உள்ள நிலையில், இவை அனைத்தும் சிதைந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன.

தமிழ் வளர்த்த சான்றோர் சிலைகள் பராமரிப்பின்றி..
தமிழ் வளர்த்த சான்றோர் சிலைகள் பராமரிப்பின்றி..

இதேபோல், பேரருவி பூங்காவில் உள்ள அனைத்து உபகரணங்களும் சேதமடைந்து காண
ப்படுகின்றன. சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. ஆங்காங்கே மது பாட்டில்கள் கிடக்கின்றன. குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளித்துவிட்டு, பூங்காக்களில் குடும்பத்துடன் விளையாடி மகிழ்வது வழக்கம். ஆனால் குற்றாலம் பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

மாறாக வேதனையைத் தருவதாக உள்ளன. இயற்கை சூழ்ந்த பூங்காக்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி, நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், அதற்கு நிதி ஒதுக்க முடியாதபட்சத்தில் நன்கொடையாளர்கள் மூலமாவது பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் எதிர் பார்க்
கின்றனர்.

செயற்கை நீரூற்றா இது?
செயற்கை நீரூற்றா இது?

இதுகுறித்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் கூறும்போது, “பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பேரூராட்சி நிதியில் இருந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கு சுற்றுலா வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in