

நாமக்கல்: கட்டுப்பாடு இல்லாததால், நாமக்கல் மலைக்கோட்டை பொலிவிழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறையினர் காவலர்களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயில்கள் உள்ளன. அதுபோல, கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சந்நிதி உள்ளது.
மலைக்கோட்டையின் கீழ்ப் பகுதியில் குளம் மற்றும் பூங்கா உள்ளது. புராதன சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கோயில், குளம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசிக்க தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் மலைக்கோட்டைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகம் இருக்கும்.
அவ்வாறு வரும் மக்கள் மலைக்கோட்டைக்கு சென்று பழமை வாய்ந்த திப்புசுல்தான் கோட்டை, ஆயுதக் கிடங்கு, குளம், தானியக் கிடங்கு உள்ளிட்ட இடங்களைக் கண்டு மகிழ்வர்.
இந்நிலையில், மலைக்கோட்டைக்கு மக்கள் அதிகளவில் வந்தாலும் அங்கு பாதுகாப்பு வசதி குறைவாக உள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக வரலாற்று ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் அத்துறை சார்பில் காவலர் ஒருவரை நியமித்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வந்தனர். சில ஆண்டுகளாக அங்கு காவலர் யாரும் இல்லை.
மேலும், பாதுகாப்புக்காக நுழைவு வாயிலில் இருந்த கதவும் உடைக்கப்பட்டுள்ளது.
இதனால், நேரம் காலமின்றியும், எந்த கட்டுப்பாடும் இல்லாமலும் மலைக்கோட்டைக்கு நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் செல்லும் நிலை உள்ளது.
இங்கு வருவோர் மலைக்கோட்டை சுவர் மீது எழுதுவது மற்றும் கற்களைக் கொண்டு தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அங்குக் காவல் பணிக்கு ஊழியரை நியமிக்க வேண்டும். அதுபோல குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளக் காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.