

திண்டுக்கல்: கோடை விடுமுறை முடிவடைந்த பின்பும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறையவில்லை. வார விடுமுறை தினமான நேற்று சாரல் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை ரசித்தனர்.
கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை காலமான கடந்த ஒரு மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மிக அதிகமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்த நிகழ்வும் நடந்தது. பள்ளிகள் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவது வழக்கம்.
வார நாட்களில் கூட்டம் சற்று குறைந்திருந்தாலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாக வரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வாரமும் காணப்பட்டது. குறிப்பாக கோடை விடுமுறையின்போது கூட்டம் அதிகமாக இருக்கும் எனக் கருதி பயணத்தைத் தவிர்த்தவர்கள் தற்போது கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.
சாரல் மழையில் நனைந்தபடி..: மோயர்பாய்ன்ட், குணா குகை, தூண் பாறை, பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், ஏரிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். பகலில் சிறிது நேரம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தும், இயற்கை எழிலை ரசித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தரைப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் அதிகபட்ச வெப்ப நிலையாக 20 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது. இரவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14 டிகிரி செல்சியஸ் இருந்தது. காற்றில் ஈரப்பதம் 72 சதவீதம் இருந்ததால் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.