

போடி: மூணாறில் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதியில் ஆபத்தை உணராமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகவே, இங்கு வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்துக்கு அருகே உள்ள மூணாறு பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம். இங்கு ரசிப்பதற்கு ஏராளமான பகுதிகள் இருந்தாலும், நிலச்சரிவு போன்றவையும் உள்ளது. குறிப்பாக, தேவிகுளம் அருகே உள்ள லாக்காடு கேப் ரோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக வைக்கப்பட்ட வெடியால் இப்பகுதியில் பாறைகள் உருண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் போக்குவரத்து பல மாதங்களுக்கு பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போடிமெட்டில் இருந்து பூப்பாறை, ராஜகுமாரி, பள்ளிவாசல் வழியே மாற்றுப் பாதையில் மூணாறுக்குச் சென்று வந்தன.
தற்போது ஓரளவுக்கு இப்பகுதி சரி செய்யப்பட்டாலும் மழை நேரங்களில் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்த வழியே வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் இதனை உணராமல் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உற்சாக மனோ நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
வாகனங்களை நிறுத்த இப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புகைப்படம் எடுப்பதற்காகவே ஏராளமான வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன. தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால், மலைப்பகுதியில் உள்ள மண்ணின் இறுக்கம் குறைந்து சாலையில் சரிந்து விழும் நிலை உள்ளது. இருப்பினும், இதை உணராமல் பலரும் இந்த இடத்தை சுற்றுலாப் பகுதி போல மாற்றி வருகின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த இடம் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆபத்தை உணராமல் பலரும் இங்கு வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து வருகின்றனர். மழை நேரங்களில் இதுபோன்ற செயல் ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் இதுகுறித்த அறிவிப்பு பலகை விரைவில் வைக்கப்படும். மேலும் அலுவலர்கள் மூலம் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.