Published : 08 Jun 2023 06:31 AM
Last Updated : 08 Jun 2023 06:31 AM

ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்துக்கான கட்டணம் 100% உயர்வு: ரூ.750-லிருந்து ரூ.1,500 ஆனது - சுற்றுலாப் பயணிகள் வேதனை

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் துறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள் (கோப்புப் படம்)

தருமபுரி: தருமபுரி மாவட்ட சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் பரிசல் கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் அருவியை மையமாகக் கொண்ட சுற்றுலா தலங்கள் சிலவற்றில் ஒகேனக்கல்லும் ஒன்று. காவிரியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலத்தில் பரிசல் பயணம், எண்ணெய் மசாஜ், அருவிக் குளியல், மீன் உணவு ஆகியவை சிறப்பம்சங்கள்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பரிசல் பயணத்தை பெரிதும் விரும்புவர். குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது நண்பர்கள் குழுவுடன் பரிசலில் அமர்ந்து, குளுமையான காற்றை அனுபவித்தபடி காவிரியாற்றின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து கரை திரும்புவது அலாதியானது. குறிப்பாக, குழந்தைகள் இந்த பரிசல் பயணத்தால் பெரிதும் குதூகலமடைவர். எனவே, ஒகேனக்கல் சுற்றுலா என்றால் பரிசல் பயணத்தை தவிர்க்க முடியாது.

ஒகேனக்கல் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்ட பரிசல் பயணத்துக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது தான், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சமீபத்திய வேதனை. ஒரு பரிசலில் 4 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை என 5 பேர் பயணிக்க பரிசல் துறையில் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். சுமார் 1.30 மணி நேரம் ஒகேனக்கல் காவிரியாற்றின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்கலாம்.

இதற்கிடையில், பரிசல் கட்டணம் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பரிசல் ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் 1.45 மணி நேரம் பரிசல் பயணம் மேற்கொள்ள ரூ.1,500 என கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோர் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணிகளான ஜெயசங்கர், வழக்கறிஞர் காமராஜ் உள்ளிட்டோர் கூறியது: விலைவாசி உயர்வு போன்ற சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு தொழிலுக்கும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது தான். ஆனால், ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்துக்கு ஒரே நேரத்தில் ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. அடித்தட்டு மக்களில் தொடங்கி, ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வசதி படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருகின்றனர்.

எனவே, அனைத்து தரப்பினரும் செலுத்தும் வகையிலான கட்டண உயர்வை அதிகாரிகள் அனுமதித்திருக்கலாம். ரூ.1,500 கட்டண பயணம் மட்டுமின்றி குறைந்த அளவு தூரம் பயணிக்கும் வகையில் ரூ.750 கட்டண பயணம் ஒன்றும் தற்போதும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது கண் துடைப்புக்கான பேக்கேஜ்.

எனவே, பரிசல் கட்டண உயர்வை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். மேலும், பரிசல் ஓட்டிகளில் பலர் கட்டணம் செலுத்திய பிறகும் நெருக்கடி ஏற்படுத்தி கூடுதல் பணம் வசூலிக்கும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

கட்டண உயர்வு தொடர்பாக ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மாலாவிடம் கேட்டபோது, ‘சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசல் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து கட்டண உயர்வு தொடர்பாக நடந்த, அதற்கான கமிட்டி கூட்டத்தில் பரிசல் ஓட்டிகள் அனைவரும் ரூ.1,500 என்ற கட்டணத்தை வலியுறுத்தியுள்ளனர். எனவேதான் ரூ.1,500 என பரிசல் பயணத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x