ராமேசுவரம் கடலை ரசிக்க ‘படகு இல்ல சுற்றுலா’

ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் உள்ள மணல் திட்டு தீவில் படகு சவாரி.
ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் உள்ள மணல் திட்டு தீவில் படகு சவாரி.
Updated on
2 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீனவர்கள் பங்களிப்புடன் கடலில் படகு இல்லம் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள காரங்காட்டில் கோட்டைக்கரை ஆறு மூன்றாகப் பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் 75 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கையான அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. ஆழம் குறைவான இப்பகுதியில் கடல் புறா, கொக்கு, நெடுங்கால் உள்ளான், நத்தைக்கொத்தி நாரை, கூழைக்கடா, தாரா, கரண்டிவாயன், நீர்ச்செறகி, நீர்க்காகம் ஆகிய பறவைகள் வசிக்கின்றன.

மழைக் காலங்களில் பிளமிங்கோ, தேன்பருந்து, கடல்பருந்து ஆகியவை வலசை வந்து செல்கின்றன. ஆவுலியா எனப்படும் கடல்பசு, கடல் முள்ளெலி உள்ளிட்ட அரியவகை கடல் விலங்குகளின் இருப்பிடமாக விளங்கும் இந்த உப்பங்கழியின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள அலையாத்திக் காடுகளின் வழியாக படகு சவாரி திட்டம் நடைமுறையில் உள்ளது. இதை காரங்காடு சூழல் சுற்றுலா எனும் பெயரில் தமிழக அரசின் வனத் துறை நடத்தி வருகிறது.

ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசையில் உள்ள<br />மணல் திட்டு தீவில் படகு சவாரி.
ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசையில் உள்ள
மணல் திட்டு தீவில் படகு சவாரி.

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கால் கடற்கரையிலிருந்து குருசடை தீவுக்கு வனத் துறையினரால் சூழல் சுற்றுலா படகு சவாரி நடத்தப்படுகிறது. இதில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், பறவைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் கிராமத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் இருக்கம் மணல்திட்டு தீவுக்கு படகு சவாரியும், மண்டபம் தோணித் துறையிலிருந்து பாம்பன் பாலத்தை பார்க்கும் வகையிலும் வனத்துறையினரால் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேரளாவைப் போல படகு இல்லம் சுற்றுலாவை அறிமுகப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராமேசுவரம் அருகே உள்ள இயற்கை எழில்மிக்க<br />குருசடை தீவு.
ராமேசுவரம் அருகே உள்ள இயற்கை எழில்மிக்க
குருசடை தீவு.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத் துறையினர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட காரங்காடு, பிச்சை மூப்பன் வலசை மற்றும் குருசடை தீவு படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து குந்துக்கால் தீவு, அரியமான் கடற்கரை, காரங்காடு, பிச்சை மூப்பன் வலசை ஆகிய இடங்களில் கேரளாவைப் போல படகு இல்லம் சுற்றுலா தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குந்துக்கால் தீவு மற்றும் காரங்காடு அலையாத்தி காடுகள் பகுதியில் படகு இல்லம், மிதக்கும் உணவகம் அமைக்க ஏற்ற இடங்களாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கான திட்ட வரைவை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் விரைவில் படகு இல்லம் சுற்றுலா மீனவர்கள் பங்களிப்புடன் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in