

கூடலூர்: தேனி மாவட்ட எல்லையான கூடலூரில் திராட்சை தோட்டம் ஒன்று சுற்றுலா பகுதி யாக மாற்றப்பட்டுள்ளது. இது பலரையும் கவர்ந்துள்ளதால் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தோட்டத்தைக் காண வருகின்றனர்.
தேனி மாவட்டம் அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஆண்டின் பல மாதங்கள் குளிருடன் கூடிய ரம்மியமான பருவநிலை நிலவுவதால் உள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சுற்றுலாவைச் சார்ந்தே இப்பகுதி வர்த்தகம் இருப்பதால் இவற்றை மேம்படுத்துவதில் கேரள அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
கலாச்சார நிகழ்ச்சிகள்: இதற்காக மலையேற்றம், பசுமை நடை, ஜீப் மற்றும் யானை சவாரி, பள்ளத்தாக்கு வியூ மற்றும் களரி, கதகளி போன்ற பல்வேறு பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்று வரு கின்றன. தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகளும் இயக்கப்படுகின்றன.
மேலும் புதுப்புது சுற்றுலாப் பகுதிகளை உருவாக்குவதிலும் கேரள சுற்றுலாத் துறை முனைப்புக் காட்டி வருகிறது. இதற்காக சுற்றுலாப் பகுதிகளை தொகுப்பு முறையில் (பேக்கேஜ்) கண்டு ரசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா முகவர்கள்: ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை பார்க்கும் இடங்களைப் பொருத்து கட்டணங்கள் பெறப் படுகின்றன. இதில் தற்போது தேனி மாவட்ட எல்லையான கூடலூரில் உள்ள திராட்சை தோட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்காக தேக்கடியில் சுற்றுலா முகவர்கள் நியமிக்கப்பட்டு அங்கிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு அழைத்து வருகின்றனர். திராட்சைகள் கொத்துக் கொத்தாகத் தொங்கும் இந்தத் தோட்டத்தில் இதற்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வாக அமரவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காய்த்துத் தொங்கும் திராட்சைகளையும் பாட்டிலில் அடைக்கப்பட்ட திராட்சை சாறையும் சுற்றுலாப் பயணிகள் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இங்கு திராட்சை கன்றுகளும் விற்கப்படுகின்றன. இதற்காக நுழைவுக்கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. இந்த திராட்சை தோட்டச் சுற்றுலா பலரையும் கவர்ந்து வருவதால் பார்வையாளர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.