

தமிழகத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஒருவருக்கு 15-ம் தேதி இரவு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாவட்டங்களில்உள்ள அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளை தயார்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் முகக் கவசம் அணிவது குறைந்துள்ளது. முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் 40,024 ஆக்சிஜன் படுக்கைகள், 8,679 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 1.11 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா சிகிச்சைக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ‘எஸ்’ ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அங்கு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள பரிசோதனை ஆய்வகம் அனைத்து வசதிகளையும் கொண்டது. இந்தஆய்வகத்தை தங்களது கிளை ஆய்வகமாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை தேசிய வைராலஜி நிறுவனம் மூலம் உடனே வெளியிடவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய வைராலஜிநிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், 2 முறை பரிசோதனை செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.