

ஒமைக்ரான் வைரஸ் தொற்று 77-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 9 மாநிலங்களில், 69 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக சர்வதேச விமானநிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த, 47 வயதுடைய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று கூறும்போது, "ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 3 பேர் குணமடைந் துள்ளனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன் நைஜீரியா நாட்டிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் தொற்று உறுதியானது.
அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக பெங்களூரூவில் உள்ள இன்ஸ்டெர்ம் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில், நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 7 பேரின் மாதிரி முடிவுகள் இன்னும் வரவில்லை.
அந்த 7 பேரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். யாருடைய உயிருக்கும் பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் இதுவரை 82 சதவீதம் பேர் முதல் தவணையும், 52 சதவீதம் பேர் 2 தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடுபவர்களுக்கு உயிருக்குப் பாதிப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார். சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.