

தமிழகத்தில் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைக்குச் சேர்க்கப்படும் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல் மையம், படுக்கைப் புண்கள் சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 220 டன் கொள்ளளவு ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு வைக்கும் நிலை ஏற்கெனவே இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக 1,310 டன் அளவுக்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு மாவட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்க்கப்படும் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் நீண்ட காலமாக படுக்கையில் இருப்பவர்களுக்கு படுக்கை புண் ஏற்படும்.
இவர்களுக்காக தற்போது திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளதுபோல, அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் தலா 10 தண்ணீர் படுக்கைகளுடன் கொண்ட பிரிவு தொடங்கப்படும்.
மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்ட 142.5 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்புக்கலன் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, ப.அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.