கோயிலில் ஜாகீர் உசேனை தடுத்த விவகாரம் - புதுகை ஆட்சியர் விமர்சனம் :

கோயிலில் ஜாகீர் உசேனை தடுத்த விவகாரம் -  புதுகை ஆட்சியர் விமர்சனம் :
Updated on
1 min read

பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேனை ரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து சமூக வலைதளம் வழியாக புதுக்கோட்டை ஆட்சியர் விமர்சனம் செய்துள்ளார்.

பிரபல பரதநாட்டியக் கலைஞரும், வைணவ சொற்பொழிவாளருமான ஜாகீர் உசேன், ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு டிச.10-ம் தேதி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன், மாற்று மதத்தினர் உள்ளே செல்லக்கூடாது என தடுத்து, அவரை வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாகீர் உசேன் திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

முகநூல் பதிவு

அதில், “ஜாகீர் பிறப்பால் இந்து இல்லை என்பதால், அவர் ரங்கநாதர் கோயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் வருத்தமும், மனச்சோர்வும் ஏற்படச் செய்துள்ளது. யாரும், எந்த வழிபாட்டுத் தலங்களையும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என கருதுகிறேன். ஒவ்வொரு ஆண்டும், ஜாகீர் உசேன் எனக்கு வில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை மற்றும் கிளி கொண்டு வந்து தருவார்" என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், "வைணவத்தைப் பற்றி இவ்வளவு ஆழமான அறிவைக் கொண்ட வேறு யாரையும் நான் அறிந்ததில்லை. உங்களுடன் இருக்கிறோம் ஜாகீர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்” என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in