Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM

வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் உயிரிழப்பு : புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து தீப்பற்றியது

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் நேரிட்ட 3 விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே நாட்டாணியைச் சேர்ந்தவர் பிரசாத்(31). மாரியம்மன் கோயில் பகுதியில் மணல், ஜல்லி வியாபாரம் செய்யும் இவர், தற்போது, புதிதாக அமைக்கப்பட்டு வரும் தஞ்சாவூர்- கும்பகோணம் புதிய புறவழிச்சாலைக்கு மண் நிரப்பும் ஒப்பந்தப் பணியை எடுத்து செய்து வந்தார்.

இந்நிலையில், பிரசாத் மற்றும் அவரது நண்பர்களான மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(32), அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த சுதாகர்(27) ஆகியோர், புதிதாக அமைக்கப்பட்டுவரும் புறவழிச்சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் (சென்டர்மீடியன்) நேற்று முன்தினம் நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மாரியம்மன் கோயிலில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி, இருட்டில் இவர்களின் வாகனங்கள் இருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி, பின்னர் தடுப்புச்சுவரில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பிரசாத் உள்ளிட்ட 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்தன. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ஒரத்தநாடு அருகேயுள்ள பஞ்சநதிக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார்(26) லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் தாலுகா போலீஸார் அங்கு சென்று, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், லாரி ஓட்டுநர் உதயகுமாரை கைது செய்தனர்.

கும்பகோணம் வளையபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்(36), சுமை ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் தஞ்சாவூருக்கு வந்துவிட்டு, நள்ளிரவில் சுமை ஆட்டோவில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். அவருடன், அவரது நண்பரான செம்போடையைச் சேர்ந்த மணிகண்டன்(24) என்பவரும் சென்றார்.

சுந்தரபெருமாள் கோயில் அருகே சென்றபோது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், சுமை ஆட்டோ மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ரமேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சுற்றுலா வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பேருந்து தீப்பற்றியது

புதுக்கோட்டை அருகே வடவாளம் ஊராட்சி சின்னையாசத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் செல்வம் என்ற முருகானந்தம்(22). சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் கலையரசன் மகன் மணிகண்டன்(22). நண்பர்களான இவர்கள் இருவரும், சின்னையா சத்திரத்தில் இருந்து காரைக்குடிக்கு நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

திருமயம் அருகே பாம்பாற்றுப் பாலம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனமும் எதிரே வந்த ராமேசுவரம்- ஈரோடு அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டன. இதில், பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கிய இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், முருகானந்தம் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அரசுப் பேருந்தில் சென்ற பயணிகள் அனைவரும் உடனடியாக இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x