Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக - சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது : எதிர்த்து வழக்கு தொடர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

அந்நியச் செலாவணி மோசடிதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதை எதிர்த்து வழக்கு தொடரமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கிண்டி பகுதியில் நிறுவனங்கள் நடத்தி வரும் சகோதரர்கள் ராமு அண்ணாமலை மற்றும் பழனியப்பன். இவர்கள் தங்களது நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த செப்.2, 3-ம் தேதிகளில் இவர்களது வீட்டில்அமலாக்கத் துறை அதிகாரிகள் 36 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணங்களை பதிவு செய்தனர். இந்த சோதனையின்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகள் 2 நாட்களாக தடைபட்டது என்றும், சிசிடிவிகேமரா பதிவுகளை அகற்றியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டி ராமு அண்ணாமலை, பழனியப்பன் மற்றும் ராமு அண்ணாமலையின் மனைவி ஆர்.உமையாள் ராதை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணைக்கு ஆஜராக பிறப்பித்த சம்மன் மற்றும் சோதனையின்போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

நீதிபதி ஆர்.மகாதேவன் முன்புஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷூம்,மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் நிதியேஷ், முரளிகுமரன், நர்மதா சம்பத் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

வெளிநாடுகளில் நடந்துள்ள சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்நிய பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின்கீழ் (ஃபெமா) சம்மன்அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர இயலாது. சோதனையின்போது பெறப்பட்ட வாக்குமூலங்களின் பதிவுகளை மனுதாரர்களுக்கு அதிகாரிகள் 2 வாரங்களில் வழங்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை என்பதால் வழக்கறிஞர்களை உடன் இருக்க அனுமதிக்க முடியாது.

இவ்வாறு கூறி வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x