அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு :
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வந்தது.
அப்போது, விண்ணப்பம் வாங்கவந்தவர்களுக்கும், கட்சியினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
அதில், அதிமுகவுக்கு தொடர்பு இல்லாதவர்கள், சமூக விரோதிகளின் துணையோடு கட்சி அலுவலகத்தில் நுழைந்து, குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். மேலும், அவர்கள் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கிடைத்துள்ளது.
எனவே, அதிமுக கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு காவல் உதவி ஆணையர் தலைமையில், 25 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
