

தமிழக முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: ரோசய்யா மூத்த அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். ஆந்திராவில் நிதிஅமைச்சராக இருந்து 16 முறைபட்ஜெட் தாக்கல் செய்தார். அவரது மறைவு நாட்டுக்கு, குறிப்பாக ஆந்திராவுக்கு பெரிய இழப்பு.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை: மிக உயரிய பதவியில் இருந்தாலும், மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலமாக தென்னிந்திய அரசியலில் பயணித்தவர். அவரது மறைவு பேரிழப்பு.
தமிழக முதல்வர் ஸ்டாலின்: ஆந்திர முதல்வராக, தமிழக, கர்நாடக ஆளுநராக பணியாற்றிய அவர், சட்டப்பேரவை, மேலவை, மக்களவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர். அரசியல் சட்ட மாண்புகளை நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பு.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: தமிழக ஆளுநராக ரோசய்யாஇருந்தபோது கட்சி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் சென்று, ஆளுமை மிகுந்த சக்தியாகத் திகழ்ந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மநீம தலைவர் கமல், மமக தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், ஐஜேகேதலைவர் ரவிபச்சமுத்து ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.