நேரில் சென்று விண்ணப்பிக்க அவசியம் இல்லை - வில்லங்க சான்று தவறுகளை திருத்த : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல்

நேரில் சென்று விண்ணப்பிக்க அவசியம் இல்லை -  வில்லங்க சான்று தவறுகளை திருத்த : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் :  பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல்
Updated on
1 min read

வில்லங்கச் சான்றில் தவறுகள் இருந்தால், திருத்தம் செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பதிவுத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 1975-ம்ஆண்டு முதல் இப்போது வரையிலான காலத்துக்கு வில்லங்க சான்றுகள் விரைவுக் குறியீடு மற்றும் சார் பதிவாளரின் மின் கையொப்பம் இட்டு அலுவலகம் வராமல் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆவணத்தில் உள்ள விவரத்துக்கும், வில்லங்க சான்றில் உள்ள விவரத்துக்கும் ஏதேனும் மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை அளிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.

இதனால், மக்களுக்கு கால விரயமும், சிரமமும் ஏற்படுகிறது. நேரில் சென்று விண்ணப்பம் அளிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, வில்லங்க சான்றில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வில்லங்க சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய பதிவுத் துறையின் இணையதளத்தில் ‘அட்டவணை தரவு திருத்தம்’ என்ற தெரிவின்வழி சென்று ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் சார்பதிவாளரால் சரிபார்க்கப்பட்டு, மாவட்ட பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in