Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

மழை இல்லாவிட்டாலும் தாமிரபரணியில் 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் - தூத்துக்குடி - திருச்செந்தூர் போக்குவரத்து 2-வது நாளாக பாதிப்பு :

தாமிரபரணி ஆற்றில் முக்காணி - ஆத்தூரை இணைக்கும் பாலத்தை தொட்டபடி வெள்ளம் பாய்கிறது. படம்: என்.ராஜேஷ்.

திருநெல்வேலி/தூத்துக்குடி

திருநெல்வேலி, தூத்துக்குடி உட்படதென்மாவட்டங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று பகலில்நல்ல வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும்,திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம்138.75 அடியாக இருந்தது. அணைக்கு 6,668 கனஅடி தண்ணீர்வருகிறது. அணையில் இருந்து6,818 கனஅடி திறந்து விடப்பட்டுஉள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம், ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 102.20 அடியை எட்டியது. அணைக்கு 7,194 கனஅடிதண்ணீர் வருகிறது. அணையில்இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீராலும், காட்டாற்று ஓடைகள் நிரம்பி ஓடுவதாலும், தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அணையைத் தாண்டி நேற்று காலை 32 ஆயிரம்கன அடி தண்ணீர் தாமிரபரணி வழியாக கடலுக்கு வீணாகச் சென்றது. மாலையில் 26 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஆற்றின்குறுக்கே உள்ள ஏரல் தரைப்பாலம் மூழ்கியது. ஏரலை அடுத்துள்ள முக்காணி உயர்மட்ட பாலத்தை தொட்டபடி ஆற்றில் தண்ணீர் செல்கிறது. குரும்பூர் அருகே உள்ள கடம்பா குளம் நிரம்பி கடந்த 3 நாட்களாக உபரிநீர் வெளியேறி தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தெற்கு ஆத்தூர் அருகேஉள்ள வரண்டியவேல் தரைப் பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது.

இதனால், தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே போக்குவரத்து 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் ஏரல், தென்திருப்பேரை வழியாக திருப்பி விடப்படுகின்றன. திருச்செந்தூரில் இருந்து வரும் வாகனங்கள் ஆறுமுகநேரியில் தடுத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x