அரசின் கொள்கைகளால் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் மாறும் : ‘கனெக்ட் 2021’ கருத்தரங்கை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னையில் நேற்று தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ‘கனெக்ட் 2021’  கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கிவைத்து,  தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.படம்: க.பரத்
சென்னையில் நேற்று தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ‘கனெக்ட் 2021’ கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கிவைத்து, தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.படம்: க.பரத்
Updated on
2 min read

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழக அரசின் எல்காட் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து நடத்தும் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ‘கனெக்ட் 2021’ என்ற 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:

1996-க்கு முன்பு தமிழகத்தில் 34 மென்பொருள் நிறுவனங்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை திமுக அரசுதான் 666 ஆக மாற்றியது. ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றம், முதலீடுகளை கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னணி வகிக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் முன்னணி மாநிலமாக, உலக அளவில் கவனம் ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டிலேயே மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கணினி, மின்னணுவியல், ஆப்டிகல் தயாரிப்புகள் தயாரிப்பில் நாட்டில் 2-வது இடத்திலும், எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 3-வது இடத்திலும் உள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, முதல் இடத்தை தக்கவைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

டேட்டா சென்டர்களை அமைப்பதில் தமிழகம் சிறந்து விளங்கும்நிலையில், அதில் முதலீடுகளை ஈர்க்க ஒரு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, தரவுகளை அடிப்படையாக கொண்ட கொள்கை வடிவமைத்தலில், மாநிலத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கில், சென்னை கணிதவியல் கழகத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தொழில் துறை, நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, புறவழிச் சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், புதிய விமான நிலையம் போன்ற குறிப்பிடத்தக்க உட்கட்டமைப்பு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். தொழில்களுக்கு தேவையான முழு ஆதரவை தமிழக அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

நவீன ஒற்றைச் சாளர முறை மூலம், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்த அரசு பல சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

எங்களது புதிய கொள்கைகள், முன்முயற்சிகள் தமிழகத்தை சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும். மாநிலத்தின் பொருளாதாரம், தொழில் துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் தொழில் துறையுடன் இணைந்து செயல்படுவோம். தகவல் தொழில்நுட்பத் துறை நமது லட்சியமான 1 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைய உதவும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

முன்னதாக, கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்ட முதல்வர், கருத்தரங்க அரங்கில் தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை வெளியிட்டார். கல்லூரிமாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான ரொக்கப் பரிசுகளையும், பல்வேறு தரப்பினருக்கு கனெக்ட் மாநாடு தொடர்பான விருதுகளையும் வழங்கினார். ஆராய்ச்சித் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல், எல்காட் மேலாண் இயக்குநர் அஜய் யாதவ், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் சஞ்சய் தியாகி, சிஐஐ தமிழக பிரிவு தலைவர் சந்திரகுமார், சிஐஐ கனெக்ட் தலைவர் ஜோஷ் பவுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in