

தமிழகத்தில் ரசாயனம், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் முதலீடுசெய்ய வேண்டும் என டெல்லியில் நடந்த தொழில் மாநாட்டில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ரசாயன, பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் குறித்த 2-வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் வலுவானரசாயன தொழில் சூழல் உள்ளது. இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு,இதை வளர்ந்து வரும் துறையாக வகைப்படுத்தியதுடன், கூடுதல் சலுகைகள் மூலம் நிதி உதவியை நீட்டிக்கவும் வழிவகை செய்துள்ளது.
மேலும், மேம்படுத்தப்பட்டஒற்றைச்சாளர இணையதளம் மூலம் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கி வருகிறோம். ‘தொழில்நண்பன்’ என்ற குறைதீர்வுஇணையதளத்தையும் நிறுவியுள்ளோம். எனவே, உங்கள் புதிய மற்றும் விரிவாக்கத் திட்டத்தை தமிழகத்தில் நிறுவும்படி அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.