அன்புமணியிடம் ஆட்சியை தருவதற்குமக்கள் ஏன் தயங்குகிறார்கள்? : பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

அன்புமணியிடம் ஆட்சியை தருவதற்குமக்கள் ஏன் தயங்குகிறார்கள்?  :  பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
Updated on
1 min read

“அன்புமணி ராமதாஸை முதல்வராக்குவது இனி இளைஞர்கள் கையில்தான் உள்ளது; அவரைப்போல் திறமையானவர் யாரும் இல்லை. அவரிடம் ஆட்சியைத் தர மக்கள் ஏன் தயங்குகிறார்கள்?’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதில், டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

நாம் யாருக்கு போராடி இட ஒதுக்கீட்டை பெற்று தந்தோமோ அவர்கள், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது’ என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு மேல் முறையீடு செய்து, வழக்கை சரியாக எடுத்துச் செல்கிறது. நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

‘நாம் தமிழ்நாட்டை ஆள வேண்டும்; அன்புமணி முதல்வராக வேண்டும்’ என்ற எண்ணத்தோடு வீடு வீடாக, திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்குகளை பாமக பெற வேண்டும். ஒரு பூத்தில் ஆயிரம் வாக்குகளைப் பெற வேண்டும். இனி இந்தக் கட்சி இளைஞர்களை நம்பித்தான் உள்ளது.

தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றி பெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராக ஆள முடியும். 42 ஆண்டுகள் மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறேன். அன்புமணியைப்போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை. ஏன் இவரது கையில் ஆட்சியை கொடுக்க மக்கள் தயங்குகிறார்கள்?

சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் செய்யுங்கள். அப்படிச் செய்தால், கோட்டையில் பாமக கொடி பறக்கும். அதை நோக்கி ஊகங்கள், உழைப்புகள் இருக்க வேண்டும். அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது.

​சட்டப்பேரவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தோல்வியை தழுவியதற்கு காணம், மாவட்டச் செயலாளர்கள்தான். கடலூர் கோவிந்தராஜ் கொலை வழக்கை நான் கையில் எடுத்திருக்கிறேன். இதில் சரியான தீர்வு கிடைக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in