மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு  -  ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் :  தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு - ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

Published on

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்குவதுடன், பயிர் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.40 ஆயிரம், மறு நடவுக்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெய்த மிக கனமழையால் மாநிலத்தின் அனைத்துநீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகள், ஏரிகளில் இருந்தும் உபரிநீர்அப்படியே ஆறுகளில் திறக்கப்படுவதால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வேளாண் நிலங்கள், குடியிருப்புகள், சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், தரைப்பாலங்கள், சிறு, சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதையும் மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ நேரடியாகசென்று ஆய்வு செய்யவில்லை. பாதிப்படைந்த வீடுகள், கால்நடைகள் போன்றவை கணக்கெடுக்கப் படவில்லை. நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை,

இன்னும் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால், வெள்ளம் பாதித்த பெரும்பாலான மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரணம், அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே, நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவுக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

சுகாதார குடிநீர் வழங்குவதுடன், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளைஉடனடியாக சரிசெய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5 ஆயிரம், அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் நீர்வழித்தடங்களை தூர்வாராததாலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிமுக அரசு மீது பழிபோட்டுதப்பிக்க முயல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதிமுகஆட்சியில் இருந்த அதே திறமைவாய்ந்த அதிகாரிகள்தான் தற்போதும் பதவியில் உள்ளனர். அப்போதுஇதே அதிகாரிகள்தான் மீட்புப்பணிகளில் திறம்பட ஈடுபட்டு, ஒருசில நாட்களில் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைத்து இயல்பு நிலைக்குகொண்டு வந்தனர். அவர்களின் திறமையை இந்த அரசு பயன்படுத்தவில்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனியாவது அரசு விழித்துக்கொண்டு, இயற்கை பேரிடர்களில்உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைஇயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in