Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

தமிழகத்தை தொழில்துறையில் - முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் : கோவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என கோவையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.587.91 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 திட்டப்பணிகளைப் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல், ரூ.89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.646.61 கோடி மதிப்பில் 25,123 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பான விழா, வஉசி மைதானத்தில் நேற்று நடந்தது.ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வரவேற்றார். அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடக்கவுரை ஆற்றினார். விழாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில், மற்ற மாவட்டங்களில் வெற்றி கிடைத்தாலும், கோவையில் நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வெற்றியை தவறவிட்டாலும், கோவையில்தான் தற்போது இம்மக்கள் சந்திப்பு நடக்கிறது. எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்த்து பணியாற்றுவதுதான் என் லட்சியம். என் அரசு கடைசி வரை இதை கடைபிடிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக, இந்த அரசு ரூ.1,132 கோடியை ஒதுக்கியுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். கோவை மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகிக்கப்படும். கோவை மாவட்டத்தில் 5 திட்ட சாலைகள் அமைக்கவும், சாலைகள் மேம்பாட்டுக்காகவும் ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு பகுதிகளில் ரூ.309 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். நகரின் மையப்பகுதியில் இருக்கும் சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும். காந்திபுரத்தில், உள் அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் கூடிய செம்மொழிப் பூங்கா ரூ.200 கோடி மதிப்பில் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். மாநகரில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக ரூ.11 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.கோவை மக்களின் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி மதிப்பில் மருத்துவ மையங்கள், 3 மருத்துவ ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.

கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தோம். அதன்படி, இதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட, சிறந்த மாவட்டமாக கோவை உறுதி செய்யப்படும். கோவை முக்கியமான தொழில் மாவட்டமாகும். இதுபோன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பது தான் என் விருப்பம். ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு வகையான சிறந்த தொழில்களை கொண்டுள்ளன. அந்த தொழிலில் சிறப்பு கவனம் செலுத்தி, சீர்தூக்கி, எல்லாவித பணிகளிலும் ஈடுபட அரசு திட்டமிட்டுள்ளது.

நாளை (இன்று) கோவையில் தொழிலதிபர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் மக்களை வளர்க்க முடியும். மக்களின் வளர்ச்சியில் நாட்டின் வளர்ச்சி உள்ளது. இந்தியாவின் முதன்மை தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். நான் அதிகம் பேச மாட்டேன். செயலில் என் பணி இருக்கும். இம்மாவட்டம் தமிழகத்தில் தலைசிறந்த மாவட்டமாக உள்ளது என்ற பெருமையைப் பெற நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம். அதற்கு நீங்கள் ஒத்துைழப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நம்பர் 1 தமிழ்நாடு

இதேபோன்று, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அனைத்து தரப்பு மக்களையும், தமிழகத்தையும் மேம்படுத்தக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. ஓர் ஆட்சியின் அரசாக இது இருக்காது. இனத்தின் அரசாக, அனைத்து தரப்பு தமிழர்களையும் மேம்படுத்தும் அரசாக இருக்கும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் செய்த திட்டங்களைபோல இன்னும் நிறைய திட்டங்களை அடுத்த நான்கரை ஆண்டுகளில் செய்ய உள்ளோம். ‘நம்பர் 1’ தமிழ்நாடு என்று அனைவரும் சொல்கின்றனர். இதை தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமையாகத்தான் நினைக்கிறேன். ‘நம்பர் 1’ ஸ்டாலின் என்பதைக் காட்டிலும், ‘நம்பர் 1’ தமிழ்நாடு என்று சொல்வதே எனக்குப் பெருமை.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்எல்ஏ வானதிக்கு மேடையில் இருக்கை

கோவை வஉசி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் பங்கேற்க, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விழா அரங்குக்கு வந்து, முன் வரிசையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர முயன்றார். அப்போது இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், எம்எல்ஏ வானதி சீனிவாசனை மேடைக்கு வந்து அமருமாறு வலியுறுத்தினார். அமைச்சர்களும் இதை வலியுறுத்தினர். இதையடுத்து மேடையில் கூடுதலாக ஒரு இருக்கை அமைக்கப்பட்டு, எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேடையில் அமர்ந்தார். மேலும், எம்எல்ஏக்கள் சார்பாக அவர் வாழ்த்தியும் பேசினார். அதேசமயம், கோவையின் மற்ற 9 தொகுதிகளை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் இவ்விழாவைப் புறக்கணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x