அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை : பழனிசாமி குற்றச்சாட்டுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்

அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை :  பழனிசாமி குற்றச்சாட்டுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்
Updated on
1 min read

மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்துவரும் அம்மா மருந்தகங்களை மூடுவது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறிய நிலையில், அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என்று கூட்டுறவு சங்கபதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்கள் தொடங்க, மாநில விலை நிலைப்படுத்தும் நிதியில் இருந்து ரூ.20 கோடியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார். 20 சதவீதம் வரை தள்ளுபடி என மலிவுவிலையில் மருந்துகளை அம்மாமருந்தகங்கள் விற்பனை செய்கின்றன.

ஆனால், திமுக அரசு தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமின்றி, நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களை மூட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இது மக்கள் நல அரசாக இல்லாமல், மக்கள் நலத் திட்டங்களை பறிக்கும் அரசாக உள்ளது. நிதிநிலையை மேம்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட 2 வல்லுநர் குழுக்கள் என்னசெய்கின்றன என்று தெரியவில்லை.

அம்மா மருந்தகங்களை மூடுவது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் கொதித்து எழுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பதிவாளர் விளக்கம்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூடிவருவதாக தவறான குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர் சுமத்தியுள்ளார். கூட்டுறவு சங்கங்கள் மூலம்தமிழக அரசு 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் என 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதும், ஏற்கெனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எண்ணிக்கை 126-ல் இருந்து 131 ஆகஇந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயன்பெற்றுவருவதை அரசு உணர்ந்துள்ளதால்தான் அம்மா மருந்தகங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in