

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மொத்தம் 72 லட்சத்து 20 ஆயிரத்து 454 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 33.82 லட்சம் பேர், பெண்கள் 38.38 லட்சம் பேர்.
பதிவுதாரர்களில் 1.70 லட்சம் பேர் எம்.ஏ., 1.96 லட்சம் பேர் எம்.எஸ்சி.,56,730 பேர் எம்.காம். படித்துள்ளனர். பி.எட். முடித்த முதுகலைப் பட்டதாரிகள் 2.66 லட்சம் பேர். பி.எட். முடித்தபட்டதாரிகள் 3.56 லட்சம் பேர்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து 1.83 லட்சம் பேரும், பி.இ., பி.டெக். படித்துவிட்டு 2.83 லட்சம் பேரும், பி.எஸ்சி. விவசாயம் முடித்துவிட்டு 8,136 பேரும், பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) படித்துவிட்டு 1,297 பேரும், எம்பிபிஎஸ் முடித்துவிட்டு 1,453 பேரும், பி.இ. வேளாண்மை பொறியியல் படித்து விட்டு 324 பேரும், எம்.இ., எம்.டெக்.முடித்துவிட்டு 2 லட்சத்து 51 ஆயிரத்து 110 பேரும் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.