Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - ரூ.5,000 நிவாரணம் கோரி நாளை : 11 மாவட்டங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் : மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பாஜக சார்பில், 11 மாவட்டங்களில் நாளை (நவ.19) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சேதங்களை நேற்று பார்வையிட்ட அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், இதே முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது 'நிவர்' புயல் ஏற்பட்ட நேரத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரினார். அதன்படி பார்த்தால் ஹெக்டேருக்கு ரூ.71,400 ஆகும். எனவே, நிவாரணத் தொகையை முதல்வர் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை (19-ம் தேதி) சென்னையைச் சுற்றியுள்ள 11 மாவட்டங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக முதல்வர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட நிகழ்ச்சிகளை ஒரு டூரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி செய்துள்ளனர். அழுகிய பயிர்களை கையில் எடுத்து பார்த்தால்தான் விவசாயியின் வேதனை புரியும். பாதிப்புகளை முறையாக பார்த்திருந்தால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அறிவித்திருப்பார்.

நவ.22 ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைப்பதாக திமுகதேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு,தற்போது ரூ.3 மட்டுமே குறைத்துஉள்ளனர். அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் கூட பெட்ரோல் விலையை ரூ.8 முதல் ரூ.10 வரை குறைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு திமுக தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நல்ல திறமையான, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்கள் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள். மக்களுக்காக பாஜக இருக்க வேண்டும். மக்களுக்காக போராட வேண்டும். மக்களுக்கான குறைகளை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதுதான் பாஜக வளர்ச்சியடைய ஒரே வழி. அதனை நாங்கள் தெளிவாக செய்வோம் என, கட்சித் தலைமை நம்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x