

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சன்கோட்டகம், தென்பாதி, மேலமருதூர் பகுதிகளில் மழையால் சேதமடைந்தபயிர்களை நேற்று பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் வேலைக்கு செல்ல முடியாத விவசாயத் தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக, கான்கிரீட் வீடுகளை கட்டித்தர வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் வளவனாற்று கரையைப் பலப்படுத்துதல், சாலை அமைத்தல்பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணிகள் சரிவர செய்யப்படாததால், கரைகள் உடைந்து, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அரசு தலையிட்டு, வளவனாற்று கரையைப் பலப்படுத்தி, சாலை அமைத்துத் தர வேண்டும் என்றார்.