Last Updated : 06 Nov, 2021 03:06 AM

Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

முல்லைப் பெரியாறு அணையில் - நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவோம் : நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

பேபி அணையைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பின்பு முல்லைப் பெரியாறு அணைநீர்மட்டம் 152 அடிக்கு உயர்த்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்புமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உயர்ந்திருந்த நிலையில் கடந்த 29-ம் தேதி கேரள மாநிலத்துக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இதற்குதமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. 5 மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர்வரத்து, மதகு, கசிவுநீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அமைச்சர்கள் இ.பெரியசாமி, பி.மூர்த்தி, அர.சக்கரபாணி ஆகியோர் உடனிருந்தனர். பின்பு மீண்டும் தேக்கடிக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தேன். பெரியாறு அணையில் 30 ஆண்டுநீர்வரத்தை கணக்கிட்டு மத்தியநீர்வள ஆணையம் மாதாந்திர நீர்நிறுத்த பட்டியலை (ரூல் கர்வ்) வெளியிட்டுள்ளது. இதன்படியே அணையின் நீர் தேக்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும் வருகிறது.

இதன்படி நவ.11-ம் தேதி வரை 139.50 அடிநீர் தேக்கப்படும். வரும்30-ம் தேதி 142 அடிக்கு நீர்மட்டம்உயர்த்தப்படும். பேபி அணையைபலப்படுத்திவிட்டு 152 அடிக்குநீரை நிலைநிறுத்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்துஉள்ளது. எனவே பேபி அணையைப் பார்வையிட்டேன். அங்குள்ள 3 மரங்களை அகற்றினால்தான் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியும். இவற்றைஅகற்ற கேரள அரசிடம் கேட்டபோது, மத்திய வனத்துறைதான் அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். 3 மரங்களை வெட்டுவதற்கு அதிமுகவால் 7 ஆண்டுகளாக முடியவில்லை.

அதிமுகவுக்கு உரிமை இல்லை

மரங்களை அகற்றி பேபி அணையைப் பலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும். அதன் பின்பு 152 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்படும். தமிழகத்தில் இருந்து தற்போது அதிகபட்சமாக விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி நீர்தான் எடுக்கமுடிகிறது. கூடுதல் நீர் பெற இருமாநில அரசுகளும் கலந்து பேசிய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணைகுறித்து பேசுவதற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தார்மிக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறி மாறி பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அந்தத்துறை அமைச்சர்கள் ஒருவர்கூட இந்த அணையை பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவராவது ஆய்வுசெய்திருக்கலாம். அப்போதுஅணையைக் கவனிக்காமல் விட்டுவிட்டு இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியன், தேனிமாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன்,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியாறு அணை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், கூடுதல் தலைமை பொறியாளர் ஞானசேகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x