Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

பாரா தடகளத்தில் பதக்கங்கள் வென்ற - தங்கவேலு மாரியப்பனுக்கு அரசுப் பணி : முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

பாரலிம்பிக் போட்டி மற்றும் சர்வதேச பாரா விளையாட்டுகளில் உயரம் தாண்டுதலில் பதக்கங்கள் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான தங்கவேலு மாரியப்பன் ஆண்களுக்கான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கற்று ரியோ, பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 2016-ல் தங்கமும், இந்தோனேசியாவில் நடைபெற்ற 3-வது ஆசியபாராவிளையாட்டுப் போட்டியில் வெண்கலமும், துபாயில் நடைபெற்ற உலக பாராதடகள சாம்பியன்ஷிப்பில் 2019ல் வெண்கலமும், ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 2020-ல் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.

பிபிஏ பட்டதாரியான தங்கவேலு மாரியப்பன், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் முதுநிலை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கவேலு மாரியப்பனின் சர்வதேச விளையாட்டு சாதனைகளை கருத்தில்கொண்டு அவரை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவுனத்தில் துணைமேலாளர் (விற்பனை) பதவிக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவ.வீ.மெய்யநாதன், கனிமொழிஎம்.பி., தொழில்துறை செயலர்நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா,தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்க பொது மேலாளர்பி.கிருபாகராஜ், பொதுச்செயலாளர் கே.ஜி.மெர்லின் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x