

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் நடைபெற்ற அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கலந்துகொண்டார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரனின் மகள் ஜெயஹரிணி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமனாத துளசி ஐயா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பூண்டி புஷ்பம் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
விழாவில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திருச்சி எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இருவர் சந்திப்பால் சலசலப்பு
இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று தினகரனை சந்தித்துப் பேசினார். கடந்த 2 நாட்களாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா - தினகரன் சந்திப்புஅதிமுக, அமமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா பங்கேற்பு
இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று மதியம் 12 மணிக்கு புறப்பட்டு பூண்டிக்குச் சென்றார். வழியில், மாரியம்மன் கோவில் கிராமம் அருகே வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பார்த்ததும், காரை விட்டு இறங்கிச் சென்று, அந்தப் பெண்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு சால்வைகளை வழங்கினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு பூண்டிக்குச் சென்று திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்திவிட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு சென்றார்.
ஓபிஎஸ் சொன்னது சரி: தினகரன்
முன்னதாக, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது: சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து, நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான்.
அவர் எப்போதுமே நியாயமாகத்தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தை துணிந்து கூறியிருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்தவுமே அமமுக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியை எங்களின் இறுதிமூச்சு உள்ளவரை தொடர்வோம். இவ்வாறு தினகரன் கூறினார்.