பாலியல் வழக்கு குற்றவாளிகளை உறவினர்கள் சந்தித்த விவகாரம் - சேலத்தில் எஸ்எஸ்ஐ உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் :

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சேலம் சிறைக்கு போலீஸார் அழைத்து வரும் வழியில், குற்றம்சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசிய உறவினர்கள்.
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சேலம் சிறைக்கு போலீஸார் அழைத்து வரும் வழியில், குற்றம்சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசிய உறவினர்கள்.
Updated on
1 min read

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய பின்னர் சேலம் சிறைக்கு அழைத்து வரும் வழியில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக எஸ்எஸ்ஐ உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அருளானந்தம் மற்றும் பாபு, ஹேரேன்பால் உள்ளிட்டோர் கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சேலம் ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் கோவைக்கு வேனில் அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அனைவரையும் வேனில் ஏற்றி சேலத்துக்கு போலீஸார் புறப்பட்டனர். அப்போது, வழியில் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் சாலைஓரத்தில் போலீஸார் வேனை நிறுத்தினர். அப்போது, வேனில் வந்த குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள் சந்தித்துப் பேசினர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாயின.

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போலீஸார் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இதுதொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடாவின் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் எட்டியப்பனை விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள் விதிமீறி சந்தித்து பேசியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சேலம் ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரையும் பணியிடை நீக்கம்செய்து மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in