Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

மெரினாவில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு - ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை : ‘5 ஆண்டாக தேக்கிய பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன்’ என உருக்கம்

ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என்று சசிகலா உருக்கத்துடன் தெரிவித்தார்.

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அவரது தோழியான சசிகலா அக்டோபர் 16-ம் தேதி செல்வதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், அமமுக கட்சியினர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று திரளாக கூடியிருந்தனர்.

காலை 11.25 மணிக்கு அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா அங்கு வந்தார். அப்போது அதிமுக,அமமுக கொடிகளுடன் வந்திருந்தவர்கள் அவரை வாழ்த்தி உற்சாக கோஷமிட்டனர்.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற சசிகலா மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதைசெலுத்தினார். சிறிது நேரம் கண்ணீர்மல்க, இரு கை கூப்பி வணங்கியபடியே இருந்தார். பின்னர், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:

ஜெயலலிதா நினைவிடத்துக்கு நான் இவ்வளவு தாமதமாக வந்ததற்கான காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும். மக்களுக்கும் நன்றாக தெரியும்.

ஜெயலலிதாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும். நானும் அவரும் பிரிந்ததே இல்லை. இந்த 5 ஆண்டுகால இடைவெளியில், நான் என் மனதில்தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தமிழக மக்கள், தொண்டர்களுக்காகவே வாழ்ந்தனர். நடந்தவிஷயங்களை ஜெயலலிதாவிடம் மானசீகமாக சொல்லி, நல்லஎதிர்காலம் இருக்கிறது என்பதையும் தெரிவித்துவிட்டுத்தான் வந்தேன். அதிமுகவையும், தொண்டர்களையும் அவர்கள் இருவரும் நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக, அமமுக கட்சிக் கொடிகளுடன் ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சசிகலாவை வரவேற்கும் பதாகையை ஏந்தியபடி பல பெண்கள் வந்திருந்தனர். பலரும் சசிகலாவுடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x