Published : 13 Oct 2021 05:49 am

Updated : 13 Oct 2021 05:49 am

 

Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

குறைந்தபட்ச ஆதார விலையில் - உளுந்து, பயிறு நேரடி கொள்முதல் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

உளுந்து கிலோவுக்கு ரூ.63-ம், பச்சைப் பயறுக்கு ரூ.72.75-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் அறிவித்தபடி பலன் தரும் பயறு உற்பத்தி திட்டத்தின்கீழ் காரீப் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பயறு ஆகியவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பு பருவத்தில் 4 ஆயிரம் டன் உளுந்தும், 3,367 டன் பச்சைப் பயறும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.


உளுந்து கிலோவுக்கு ரூ.63-ம், பச்சைப் பயறுக்கு ரூ.72.75-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவரை தற்போது வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதால், அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் செய்யப்படும். கொள்முதலுக்காக கொண்டு வரப்படும் உளுந்து,பச்சைப் பயறின் ஈரப்பதம் 12 சதவீதத்தில் இருக்குமாறு நன்கு உலர வைத்து, சுத்தம் செய்து நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும்.

உளுந்து கொள்முதலை பொருத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், பாசிப் பயறு கொள்முதல் சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் கடந்த 1-ம் தேதி தொடங்கி 90 நாட்கள் வரை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப் பயறுக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x