முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் உட்பட - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வி.முருகானந்தம்(47). இவர், புதுக்கோட்டை ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி (38). இவர், முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவராக உள்ளார்.
இவர்கள் 2017-ல் இருந்து 2020 வரை ரூ.15 கோடிக்கு விவசாய நிலம், வீடு, மனை போன்ற அசையா சொத்துகளை வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக, அதாவது 1,260 மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக முருகானந்தம், காந்திமதி ஆகியோர் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கடுக்காக்காட்டில் உள்ள இவர்களது வீடு, முருகானந்தத்தின் சகோதரரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரும், உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டவருமான வி.பழனிவேலுக்கு சொந்தமான கடுக்காக்காடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு மற்றும் வணிக வளாகம், கடுக்காக்காட்டில் உள்ள இவர்களது மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
கடுக்காக்காட்டில் நடைபெற்ற சோதனை இரவு 7.30 மணியளவில் முடிவடைந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள முருகானந்தம், பழனிவேல் ஆகியோரது வீடுகளில் இரவு 9 மணிக்குப் பிறகும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.
