Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
‘என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, வீடு உட்பட 35 இடங்களில் கடந்த 16-ம் தேதி ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, திருப்பத்தூரில் கே.சி.வீரமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: என்னுடைய வீட்டில் சோதனை நடத்தி முடிந்த பிறகு என்னென்ன எடுக்கப்பட்டது என்று என்னிடம் ஒரு நகல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், நான் கையெழுத்து போட்டிருக்கிறேன்.
என்னிடம் இருந்து 2,746 கிராம் தங்க நகைகள், 2,508 அமெரிக்க டாலர், ரொக்கப்பணம் 5 ஆயிரத்து 600 ரூபாய் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது என்னுடைய உறுதிமொழி பத்திரத்தில் 300 பவுனுக்கும் அதிகமாக இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறேன். அதை குறிப்பிட்டு என்னுடைய நகை என்னிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
7-ம் வகுப்பில் பென்ஸ் கார்
சிறு வயதில் இருந்தே எனக்கு கார்கள் என்றால் பிரியம். நான் 7-ம் வகுப்பு படிக்கும்போதே பென்ஸ்கார் வைத்திருந்தேன். என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. நாங்கள் வியாபார குடும்பம். ஆண்டுதோறும் நான் வருமான வரி செலுத்துகிறேன். எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு உள்ளது. கணக்கில் வராமல் எதுவுமே எங்களிடம் இல்லை.புதிய கட்டுமானப் பணிகளுக்காக மணல் வாங்கி வைத்திருக்கிறோம். குறைவான அளவில்தான் மணல் இருக்கிறது. 551 யூனிட் மணல் இருப்பதாக செய்தி வெளியாகிறது. யாருமே என்னுடைய வீட்டுக்குள் வரவில்லை.
இரவு 10 மணிக்குத்தான்சோதனை முடிந்தது. ஆனால், மாலையிலேயே கோடிக்கணக்கில் பணம், நகை, சொத்து பறிமுதல் என செய்தி வெளியாகிறது. திட்டமிட்டு தவறான தகவல்கள் பத்திரிகைகள் வாயிலாக பரப்பப்படுகின்றன. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வேன். எதையும் நீதிமன்றம் வாயிலாக நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT