

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தேரிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை 5 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஊராட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான ஏலம் ஊரில் உள்ள கோயில் எதிரே ஊரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்ததாகவும், அப்போது வெள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவர் ரூ.14 லட்சத்துக்கு தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சித்தேரி கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள சற்குணத்தின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என இளைஞர்கள் தரப்பில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவும் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி கடந்த 17-ம் தேதி ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது இதே மாவட்டத்தில் மேலும் ஒரு ஊராட்சிமன்றத் தலைவர் பதவியும் ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் ஊராட்சிகளில் முகாமிட்டு ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்படும் தகவலறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.