Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : சேலத்தில் பயிற்சி மையம் தொடங்க விருப்பம்

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய மாரியப்பனுக்கு சேலம் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. “விரைவில் சேலத்தில் பயிற்சி மையம் தொடங்க இருப்பதாக” மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் நேற்று தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டிக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து காரில் வந்த மாரியப்பனுக்கு, சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் தாரை தப்பட்டைகள் முழங்க, மலர்களை தூவியும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

சேலம் ஆட்சியர் கார்மேகம், மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பொன்னாடை போர்த்தி, கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாரியப்பனுக்கு அவரது தாய் சரோஜா ஆரத்தி எடுத்து வரவேற்றார். மாரியப்பனுடன் அவரது மனைவி ரோஜா, மூத்த சகோதரி சுதா, சகோதரர்கள் குமார், கோபி ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் மாரியப்பனை ஊர் மக்கள் தோளில் உட்கார வைத்து அலங்கரிக்கப்பட்ட ஜீப்புக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஜீப்பில் நின்றபடி வீட்டுக்குச் சென்ற மாரியப்பனுக்கு வழி நெடுக மக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்

இதனிடையே செய்தியாளர்களிடம் மாரியப்பன் கூறியதாவது:

கடந்த முறை பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிலையில், தற்போது வெள்ளிப் பதக்கம் பெற்றது சற்று கவலையை ஏற்படுத்தியது. எனது தாயாருக்கும் நான் தங்கப் பதக்கம் பெறவில்லை என்பது வருத்தம்.

ஆனாலும், நாட்டுக்காக மீண்டும் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். பிரதமரையும், தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

விரைவில்,சேலத்தில் பயிற்சி மையம் தொடங்கி கிராமப்புற வீரர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன். மக்களுக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x