

செஞ்சி அருகே கூடா நட்பால் குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்துக்கு காரணமான நபரை பிடிக்க தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலபாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன்(37). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல்(4), பிரதீப்(2) என இரு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த பிப்.23-ல் பிரதீப்பை துளசி கொடூரமாக தாக்கி அதனை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அவரே காயம்அடைந்த குழந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு துளசியின் செல்போனை வடிவழகன் பார்த்துள்ளார். அதில் பிரதீப்பை துளசி தாக்கும் 4 வீடியோக்களை பார்த்து. அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே, தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வடிவழகன் குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொண்டு, துளசியை மட்டும் அவரது தாய்வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். சம்பந்தப்பட்ட வீடியோ உறவினர்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. பெற்ற தாயே குழந்தையின் முகத்தில் கைகளாலும், செருப்பாலும் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை வடிவழகன் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் துளசி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ஆந்திரா சென்று துளசியை கைது செய்து அழைத்து வந்தனர். துளசியிடம் நடத்திய விசாரணை தொடர்பாக போலீஸ் கூறியது: 2019-ல் குடும்ப வறுமை காரணமாக வடிவழகன், துளசி இருவரும் சென்னைக்கு வேலைக்குச் சென்றனர். அங்கு தினக்கூலிக்கு வடிவழகன் சென்று வந்த நிலையில், அங்குள்ள ஹார்டுவேர் கடை ஒன்றில் துளசி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருடன் அவருக்கு கூடாநட்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக வடிவழகன், துளசி இருவரும் மீண்டும் ஊருக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும், பிரேம்குமாருடன் துளசி போனில் பேசி வந்துள்ளார். அப்போது பிரேம்குமார் துளசியை 2-வதாக திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் துளசியின் மூத்த மகன், துளசியின் முகஜாடையில் இருப்பதாகவும், இளையமகன் பிரதீப் அவனது தந்தை வடிவழகன் முகஜாடையில் இருப்பதாகவும் கூறிய பிரேம்குமார், 2-வது குழந்தையை அடித்து துன்புறுத்த வேண்டும்என்று கூறியிருக்கிறார். அதன் பேரில் குழந்தை பிரதீப்பை கொடுமையான முறையில் துன்புறுத்தியதாக துளசி கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார்நேற்று துளசியை செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ்முன்பு ஆஜர்படுத்தி, கடலூர்மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர், துளசியை பரிசோதனை செய்தார். ‘துளசி நல்ல மனநிலையில் உள்ளார்’ என மனநல மருத்துவர் சான்றளித்துள்ளார். இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்ய போலீஸார் சென்னை விரைந்துள்ளனர்.