Last Updated : 28 Aug, 2021 03:13 AM

 

Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

வேலை வாங்கித் தருவதாக குறுந்தகவல் அனுப்பி - தமிழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட டெல்லி இளைஞர்கள் 3 பேர் கைது : 31 மொபைல் போன், சிம்கார்டு, ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

வேலை வாங்கித் தருவதாக குறுந்தகவல் அனுப்பி தமிழகத்தில் 20 மாவட்டங்களைச் சேர்ந்தோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூரைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி சாரதா (31). பட்டதாரியான இவரது மொபைல் போனுக்கு `வேலை வேண்டுமா உங்களது விவரங்களை அனுப்புங்கள்' என்ற குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பி தனது முழு விவரங்களை அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து வேறொரு எண்ணில் இருந்து பேசிய நபர், தான் டெல்லி ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும் அங்கு வேலை காலியாக உள்ளது. இதற்கு முன்கட்டணம் ரூ.2,550 என்று கூறினார். இதை வங்கிக் கணக்கில் செலுத்தக் கூறியதன்பேரில் சாரதா செலுத்தி உள்ளார்.

மேலும் பல்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டு பயிற்சிக் கட்டணம், தொழில்நுட்பக் கட்டணம், தொழில்நுட்ப கருவிகள், டெலிவரி கட்டணம், குடும்ப காப்பீடு, பயிற்சிக்கு தங்குவதற்கான கட்டணம், மருத்துவக் கட்டணம் என ஒவ்வொரு கட்டமாகப் பேசி பல தவணைகளில் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425 வரை வங்கிக் கணக்கு மூலம் பெற்றனர்.

பின்னர் அவர்களிடம் பணியில் சேர்வது எப்போது எனக் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாரதா தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் சரவணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

வங்கிக் கணக்கில் இருந்த மொபைல் எண்ணை வைத்து கோவிந்த் (21) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். முறைகேட்டில் ஈடுபட்டோருக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின்பேரில் கோவிந்த் மற்றும் டெல்லியைச் சேர்ந்த விஜய்(29), ராம்சந்திரன் (33) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து தேனி அழைத்து வந்தனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட விஜய், ராம்சந்திரன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு தலைமுறையாக டெல்லியில் வசிக்கின்றனர்.வங்கியில் உதவியாளர்வேலை பார்த்ததால் வங்கிப் பரிவர்த்தனைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். பின்னர் மதுவுக்கு அடிமையானோர், ஏழ்மையில் உள்ளோரிடம் பணம் கொடுத்து அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி சிம்கார்டுகள் வாங்கி தங்கள் வசம் வைத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் நன்றாகப் பேசியதாலும், சிறிது சிறிதாக பணம் கேட்டு அதற்காக ஒரு ஆவணத்தை அனுப்பிக் கொண்டே இருந்ததாலும் பலரும் நம்பி ஏமாந்துள்ளனர் என்றார்.

தனிப்படை ஆய்வாளர் சரவணன் கூறுகையில், பிடிபட்டவர்கள் 31 மொபைல் எண்களை வைத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்ணில் இருந்தே பேசியுள்ளனர். மொபைல் போன் எண் மாறி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மொபைல் போனிலும் ஏமாற்ற நினைப்போரின் பெயரை எழுதி ஒட்டி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பணத்தை எடுத்து உடனடியாக செலவு செய்ததால் அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே மீட்க முடிந்தது. வெளிநாட்டு சுற்றுலா, ஆடம்பரமான வாழ்க்கை என செல்வச் செழிப்பில் இருந்தது தெரியவந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x